அனைத்து கட்சி கூட்டத்திற்கு பயந்தாங்கொள்ளிகள் வரவில்லை, வீரர்கள் வந்தனர்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சென்னை: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பயந்தாங்கொள்ளிகள் வரவில்லை, வீரர்கள் வந்துள்ளார்கள் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி: அனைத்து கட்சி கூட்டத்தில் 49 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டனர். அனைவரின் கருத்துகளை கேட்டறிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் எஸ்ஐஆரால் பாதிப்பு ஏற்படும்.
தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி திட்டமிட்டு சதி செய்கிறது ஒன்றிய அரசு. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளோம். அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க உள்ளோம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடைபெறுவது எஸ்ஐஆர் அல்ல. பட்டியலில் பெயர்களை நீக்க நடைபெறும் சதி. திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு பயம் இல்லை. அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று வந்தவர்கள் பெருந்தன்மையாக வந்திருக்கிறார்கள்.
ஜனநாயக உணர்வு இருக்கிறது. மற்றவர்கள் ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக பயந்து கொண்டுள்ளனர். பயந்தாங்கொள்ளிகள் வரவில்லை, வீரர்கள் வந்தார்கள். இந்த மோசடியை பார்த்து அமைதியாக இருக்க முடியாது. நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள போது தேர்தல் ஆணையம் ஏன் மற்ற மாநிலங்களில் இதனை அமல்படுத்த பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.