குடிப்பழக்கமும் உடல் பாதிப்புகளும்: டாக்டர் ஆர்.கண்ணன் விளக்கம்
சென்னை: அரும்பாக்கம் ப்ரைம் மருத்துவமனை சேர்மனும் இரைப்பை, குடல், கல்லீரல் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.கண்ணன் கூறியதாவது: குடிப்பழக்கம் என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் இருப்பதையே குறிக்கும். நீண்ட காலம் மது அருந்துவதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மது உடலில் மூளை, உணவுப்பாதை, கல்லீரல், கணையம், நரம்பு மண்டலம் மற்றும் இனவிருத்தி உறுப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும்.
மது உடலுக்குள் சென்றவுடன் பெரும்பகுதி ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பரவுகிறது. சிறிதளவு சிறுநீரிலும், மூச்சுக்காற்று மூலமாகவும் வெளியேறுகிறது. இதனால் எல்லா உறுப்புகளையும் பாதிக்கிறது. கல்லீரல் உடலில் உள்ள பொருள்களை வெளியேற்றுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. தொடர்ந்து மது அருந்துவதால் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் சேருதல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
இதேபோல் கணையம் உணவில் உள்ள கொழுப்பு பொருட்களை செரிமானம் செய்கிறது. மதுவால் கணையம் பாதிக்கப்பட்டு அழற்சி ஏற்படுகிறது. இதனால் வயிற்றுவலி, அஜீரண கோளாறு, கணையத்தில் வீக்கம், கணையம் முற்றிலும் கெட்டுப்போன நிலை சர்க்கரைநோய் போன்ற பாதிப்பு ஏற்படுகின்றன.
மதுவால் மூளை பாதிக்கப்படுவதால் சிந்திக்கும் திறன், செயல்படும் திறன், பேச்சில் தடுமாற்றம், எதிலும் முடிவெடிக்க முடியாமல் போவது, மறதி, மன கோளாறு போன்ற பாதிப்பு ஏற்படும். பெண்கள் கருத்தரித்தாலும், மது அருந்துவதால் 2வது மற்றும் 3வது மாதத்தில் கரு கலைந்துவிடும் ஆபத்து உள்ளது. குழந்தை பிறந்தாலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குறைபாடுகளுடன் பிறக்கும். இவ்வாறு டாக்டர் கூறியுள்ளார்.