மதுப்பழக்கத்தால் என் வாழ்க்கை சீரழிந்தது: ஹாலிவுட் நடிகை உருக்கமான பதிவு
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் பாப் பாடகியும், நடிகையுமான ஜெஸிகா சிம்ப்சன், மதுப்பழக்கத்தை கைவிட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் பாப் பாடகியும், நடிகையுமான ஜெஸிகா சிம்ப்சன், கடந்த காலங்களில் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிப் போராடி வந்தார். இதுகுறித்த தனது அனுபவங்களை, கடந்த 2020ம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘ஓபன் புக்’ என்ற சுயசரிதை நூலில் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக, கடந்த 2017ம் ஆண்டு ‘ஹாலோவீன்’ பண்டிகையின் போது, அதிகமாக மது அருந்தியிருந்ததால் தனது குழந்தைகளுக்கே உதவ முடியாத நிலையில் இருந்த சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதன்பின் மதுப்பழக்கத்தைக் கைவிட்டார். நேற்றுடன் அவர் மதுப்பழக்கத்தைக் கைவிட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘மதுப்பழக்கம் எனது உள்ளுணர்வை மழுங்கடித்தது; என் கனவுகளைத் தடுத்தது; மேலும், மனநிறைவு என்ற பெயரில் எனக்குள் சுழன்றுகொண்டிருந்த அச்சங்களைத் துரத்தியது. கடவுளின் விருப்பத்தின்படி நான் முழுமையாக வாழ, மதுவில் இருந்து விலகும் முடிவு எனக்கு உதவியது. இன்று நான் தெளிவாக இருக்கிறேன். நம்பிக்கையால் உந்தப்படுகிறேன்’ என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.