கூடலூர் நாடுகாணி பகுதியில் யானைகள் வராமல் தடுத்து விரட்ட அலாரம் சிஸ்டம் தொடங்கப்படும்
*கூடலூர் கோட்ட வன அலுவலர் தகவல்
கூடலூர் : கூடலூர் கோட்ட வன அலுவலகத்தில் மாதாந்திர விவசாய குறைதீர் கூட்டம் டிஎப்ஓ வெங்கடேஷ் பிரபு தலைமையில் நடந்தது. கூடலூர், பந்தலூர் பகுதி அனைத்து வனச்சரகர்கள், வனவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தேவர் சோலை பேரூராட்சி மன்ற தலைவர் வள்ளி தலைமையில், தேவர் சோலை பேரூராட்சி மன்ற மூத்த உறுப்பினர்கள் ஹனிபா, மாதேஷ், நாசர், எமிபோல், சைனா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்து வருவது குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும், விவசாய பகுதிகளுக்குள் யானைகள் வருவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசிய கோட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, மழைக்காலம் முடிந்ததும் அகழி பராமரிப்பு பணிகள் நடைபெறும். கிராமங்கள் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ள அனைத்து யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டி அப்புறப்படுத்தி உடனடியாக பணிகள் தொடங்கப்படும். யானைகளால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு 52 பேருக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்.
வரும் நவம்பர் மாதத்தில் கூடலூர் நாடுகாணி பகுதியில் அமைந்துள்ள சென்சார் கேமரா மையத்தின் மூலம் முழுவதும் யானைகள் வரும் பாதையை கேமரா மூலம் கண்காணித்து யானைகள் உள்ளே வராமல் தடுத்து விரட்டும் அலராம் சிஸ்டம் தொடங்கப்படும்.
வனத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சோலார் மின்விளக்குகள் கிராமப் பகுதிகளுக்குள் யானை வரும் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ளது. அகழியை கண்காணிக்கும் குழுவை மக்கள் பிரதிநிதிகள் கொண்ட உடனடியாக கமிட்டி ஆரம்பிக்கப்பட்டு அதன் பரிந்துரைக்கு ஏற்ப அகழி பராமரிப்பு நடைபெறும். அதுவரை பொதுமக்கள், விவசாயிகள் பொறுமை காத்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
தேவர் சோலை பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு ஏற்ப முதலமைச்சர் ஆணைக்கிணங்க உடனடியாக மூன்று வாகனங்கள் யானை தடுப்பு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் வனத்துறை காவலர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையின் இந்த அனைத்து பணிகளும் பொதுமக்கள், விவசாயிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
வனத்துறை அலுவலருக்கு நன்றி
கூடலூர் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் கிராமங்களுக்குள் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என பெரிய அளவில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
தேவர் சோலை பேரூராட்சி 6வது வார்டு மாணிக்கல்லாடி, அஞ்சம்பலம் பகுதிகளில் தெரு விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் வனத்துறை சார்பில் சோலார் வசதியுடன் கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டது.
இப்பகுதிகளில் சோலார் மின்விளக்கு வசதி அமைத்துக் கொடுத்த கூடலூர் கோட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அஞ்சுகுன்னு பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மக்களின் உரிமை குரல் அமைப்பினர் கலந்து கொண்டனர்.