ஆலப்புழாவில் வைக்கம் வீரர் பெரியாருக்கு ரூ.4 கோடியில் நினைவு மண்டபம்: செப்.26ல் அடிக்கல்
சென்னை: கேரளாவில் தந்தை பெரியாருக்கு மேலும் ஒரு நினைவு மண்டபம் தமிழ்நாடு அரசு அமைக்கிறது. வைக்கம் வீரர் பெரியாருக்கு கேரளத்தின் ஆலப்புழா அருகே நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா செப்.26ல் நடைபெறுகிறது. பெரியார் சிறை வைக்கப்பட்ட ஆறுக்குட்டியில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என 2023ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பெரியாருக்கு நினைவு மண்டபம் அமைக்க ஆறுக்குட்டியில் உள்ள 54 சென்ட் நிலத்தை வரிச்சலுகையுடன் கேரள அரசு வழங்கி உள்ளது.
முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று ஆறுக்குட்டியில் கேரள அரசு வழங்கிய 54 சென்ட் நிலத்தில் பெரியார் நினைவு மண்டபம் அமைய உள்ளது. ரூ.4 கோடியில் பெரியார் நினைவு மண்டபத்துக்கு தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு, கேரள அமைச்சர் ஷாஜி செரியன் அடிக்கல் நாட்டுகின்றனர். ஆலப்புழாவின் ஆறுக்குட்டியில் 6 மாதத்தில் பெரியார் நினைவு மண்டபத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது
ஆறுக்குட்டியில் பெரியார் நினைவு மண்டபம் ஏன்?
கேரளத்தின் வைக்கம் நகரில் உள்ள மகாதேவர் கோயிலில் தாழ்த்தப்பட்டோர்களை அனுமதிக்கக் கோரி 1924ல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை நடத்திய தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து அப்போராட்டத்தை தொடர்ந்து நடத்த வைக்கம் சென்றார் பெரியார். வைக்கம் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பெரியாரை அப்போதைய திருவிதாங்கூர் அரசு கைது செய்தது. வைக்கம் போராட்டத்தில் பங்கேற்க வந்த பெரியாரை அன்றைய திருவிதாங்கூர் அரசு கைது செய்து ஆறுக்குட்டி சிறையில் வைத்தது
வைக்கத்தில் கைது செய்யப்பட்ட பெரியார், படகு மூலம் ஆறுக்குட்டி கிராம சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெரியார் சிறையில் இருந்த ஆறுக்குட்டி அருவிக்குத்தி, அரூவிக்குட்டி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வைக்கம் கோயில் நுழைவு போராட்டத்துக்காக கேரளத்துக்கு சென்ற பெரியார், ஆறுக்குட்டியில் இருந்த சிறையில் வைக்கப்பட்டிருந்தார். ஒரு மாத கால சிறைவாசத்தை முடித்து விடுதலையான பெரியார், மீண்டும் சத்தியாகிரக போராட்டத்தில் இறங்கினார். சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட பெரியாரை மீண்டும் திருவிதாங்கூர் அரசு கைது செய்து சிறை வைத்தது
பெரியார் சிறைவாசம் அனுபவித்ததை நினைவுகூரும் வகையில் ஆறுக்குட்டியில் அவரது நினைவு மண்டபம் அமைக்கப்படுகிறது. பெரியார், டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் தலைமையிலான போராட்டத்தால் கோயிலில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவு மண்டபம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது