ஆளந்தா தொகுதியில் வாக்கு திருட்டு முன்னாள் பாஜ எம்எல்ஏ, மகன் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 6 ஆயிரம் வாக்காளர்களை நீக்க முயன்றது கண்டுபிடிப்பு
* கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
பெங்களூரு: கர்நாடகாவில் ஆளந்தா தொகுதியில் நடந்த வாக்கு திருட்டு தொடர்பாக முன்னாள்பா.ஜ எம்எல்ஏ , அவரது மகன் உள்பட 7 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2023ல் நடந்த பொது தேர்தலின்போது, ஆளந்தா தொகுதியில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.பாட்டீல் குற்றம் சாட்டியதுடன் இது தொடர்பாக புகார் கொடுத்தார்.
அதே சமயத்தில் தேசியளவில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி போராட்டம் நடத்தி வரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் ஆளந்தா தொகுதியில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இந்த புகாரை விசாரணை நடத்த வசதியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.கே.சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைத்து மாநில அரசு உத்தரவிட்டது.
அரசு உத்தரவை ஏற்று பி.கே.சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு கடந்த மூன்று மாதங்களாக விசாரணை நடத்தியது. இதில் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பாஜ முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுபாஷ் குத்தேதார், அவரது மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் தங்களை கைது செய்துள்ளதை ரத்து செய்ய கோரியும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர்.
அம்மனுவை விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும் இப்புகாரில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பாபி அத்யா, ஓடிபி பைபாஸ் வசதியை அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொண்டுள்ளதை எஸ்ஐடி கண்டுப்பிடித்தது. அதன் பின் விசாரணையை தீவிரப்படுத்தியது.
இப்புகார் தொடர்பாக சுமார் 22 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பெங்களூரு கூடுதல் முதன்மை மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதில் தேர்தல் சமயத்தில் 5,994 வாக்காளர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மேற்கொண்ட முயற்சி உள்பட பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு காட்டியுள்ளது.
மேலும் வாக்கு திருட்டில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுபாஷ் குத்தேதார், அவரது மகன் ஹர்ஷானந்த குத்தேதார், உதவியாளர் திப்பேருத்ரா, கலபுர்கியை சேர்ந்த டெடா சென்டர் உரிமையாளர் அகரம்பாஷா, முகராம்பாஷா மற்றும் முகமது அஷ்வாக்ப் மற்றும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பாபி அத்யா ஆகியோரை குற்றவாளியாக குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.