அகிலேஷ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட விவகாரம்; சிங்கம் சிங்கத்தைத்தான் பெறும்; ஆட்டுக்குட்டியை அல்ல!: 15 வயது மகளை பாராட்டிய பாஜக பெண் எம்எல்ஏ
லக்னோ: பாஜக பெண் எம்.எல்.ஏவின் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்திய அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்களை, வீட்டில் தனியாக இருந்த அவரது மகள் தைரியமாக எதிர்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில பாஜக பெண் எம்எல்ஏ கேத்கி சிங், சமீபத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது, அவர் அரசு இல்லத்தைக் காலி செய்தபோது அங்கிருந்த குழாய்களைத் திருடிச் சென்றதாகக் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் லக்னோவில் உள்ள கேத்கி சிங்கின் வீட்டின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில், கேத்கி சிங் தனது கணவருடன் பல்லியாவில் இருந்ததாகவும், வீட்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் விபாவரி மட்டும் சமையல்காரர் மற்றும் ஓட்டுநருடன் தனியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அகிலேஷ் யாதவ் கட்சித் தொண்டர்களின் போராட்டத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாத விபாவரி, வீட்டை விட்டு வெளியே வந்து அவர்களைத் தைரியமாக எதிர்கொண்டார். அப்போது அவர், ‘நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் பயப்பட மாட்டேன். என் மீது நீங்கள் விரல் வைத்தால், என் தாய் உங்களை இரண்டாகப் பிளந்துவிடுவார்’ என்று ஆவேசமாகப் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதுகுறித்து கேத்கி சிங் கூறுகையில், ‘முதலில் மகளை நினைத்து பயந்தேன். ஆனால், அவர் பதிலடி கொடுத்த விதத்தைப் பார்த்த பிறகு என் பயம் நீங்கியது. சிங்கம் சிங்கத்தைத்தான் பெற்றெடுக்கும்; ஆட்டுக்குட்டியை அல்ல’ என்பதை என் மகள் நிரூபித்துவிட்டார். எதிர்க்கட்சியினர் பிரதமர் மோடியின் தாயாரை விமர்சிக்கும்போது, நாங்களும் குழாய் திருட்டு பற்றி நிச்சயமாகப் பேசுவோம். தாக்குதல் நடத்த வேண்டுமென்றால் என் மீது நடத்துங்கள்; என் குடும்பத்தை ஏன் குறிவைக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.