அகண்ட பாரதம் உருவாகும்போது இஸ்லாமாபாத்தில் இந்தியக்கொடி ஏற்றப்படும்: மபி அமைச்சர் பேச்சு
இந்தூர்: அகண்ட பாரம் உருவாக்கப்படும்போது இஸ்லாமாபாத்தில் மூவர்ணக் கொடி பறக்கும் என்று மத்தியப்பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்யொட்டி இந்தூரில் நடந்த கலாச்சார நிகழ்ச்சியில் பாஜ மூத்த தலைவரும் மத்தியப்பிரதேச அமைச்சருமான கைலாஷ் விஜய்வர்கியா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இதில் கைலாஷ் பேசுகையில், ‘‘தவறான கொள்கைகள் காரணமாக, பாரத மாதா இரண்டாக பிரிக்கப்பட்டார். பகத் சிங் தூக்கு மேடையை தழுவிய சுதந்திரமானது ஆகஸ்ட் 15ம் தேதி அடையப்படவில்லை. நாம் அரை மனதுடன் (கிழிந்த) சுதந்திரத்தை அடைந்தோம். நாங்கள் அகண்ட பாரதத்தை கற்பனை செய்து பார்க்கிறோம். ஒரு நாள் இஸ்லாமாபாத்தில் இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்படும். அகண்ட பாரதத்தின் கனவு நனவாகும். பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதத்தை இந்திய ஆயுத படைகள் முறியடித்தன. காலம் மாறிவிட்டது. நமது வீரர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் எதிர்கொள்ளப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.