அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்: அமைச்சர் வழங்கினார்
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோயில் ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். கடந்த ஜூலை 22ம் தேதி ஐகோர்ட் மதுரை கிளையில் நடந்த விசாரணையின்போது, அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதனையடுத்து நேற்று தமிழக அரசின் சார்பில் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் பொற்கொடி முன்னிலையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அமைச்சர் கூறுகையில், ‘அஜித் சகோதரர் நவீன்குமார், ஆவின் நிறுவனம் அல்லது மடப்புரம் காளி கோயிலில், அவர் விரும்பும் இடத்தில் பணியில் சேரலாம். வீட்டுமனையும் மடப்புரத்திலேயே வழங்க கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்’ என்றார்.