மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் கைதான காவலர்களை 2 நாட்கள் விசாரணை செய்ய சிபிஐக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் அனுமதி!!
மதுரை : அஜித் குமார் கொலை வழக்கில் கைதான காவலர்களை 2 நாட்கள் விசாரணை செய்ய சிபிஐக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது மரணடைந்த வழக்கை சிபிஐ போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையிலுள்ள தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி செல்வபாண்டி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, சிறையிலுள்ள காவலர்கள் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார். இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செல்வபாண்டி, கைதாகியுள்ள 5 போலீஸ்காரர்களுக்கு இன்று, நாளையும் என 2 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நாளை மாலை 5.30 மணிக்கு மீண்டும் 5 போலீஸ்காரர்களை ஆஜர்படுத்த வேண்டும் என சிபிஐ. அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 5 பேரையும் விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் அழைத்து சென்றனர்.