அஜித்குமார் மரண வழக்கில் திருத்திய குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் தாக்கல்: கைதான காவலர்களுக்கு நகல் வழங்கல்
மதுரை: மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் நகல் தனிப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார்(28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார்.
இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு மற்றும் சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இங்கு கடந்த ஆக.20ம் தேதி சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த முதல்கட்ட குற்றப்பத்திரிகை யை நிராகரித்த நீதிபதி செல்வபாண்டி, தேவையான திருத்தங்களை மேற்கொண்டு மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
குறைகள் சரி செய்யப்பட்டு ஆன்லைன் முறையில் மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நீதிபதி செல்வபாண்டி முன் நேற்று மீண்டும் வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.