ஏர்போர்ட் மூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து பதிவு செய்து வந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் தமிழக டி.ஜி.பி. அலுவலக நுழைவாயில் அருகே அவரை விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கியதாகவும், ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்தனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் அளித்த புகாரில், ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக மெரினா போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித் தார். இதையடுத்து நீதிபதி, மூர்த்தி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.