விசிக நிர்வாகிகளை தாக்கிய விவகாரம்; ஏர்போர்ட் மூர்த்தி கைது: 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சென்னை: டிஜிபி அலுவலகம் முன் விசிகவினரை தாக்கிய வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி வந்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் தங்கள் தலைவரை சமூக வலைதளங்களில் தவறாக பேசுவதாக கூறி ஏர்போர்ட் மூர்த்தியை ஓட ஓட தாக்கி, செருப்பால் அடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு தரப்பினரும் சாலையிலேயே ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். அப்போது பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தி தான் வைத்திருந்த பாக்கெட் கத்தியால் விசிக நிர்வாகி திலீபன் என்பவரது கையில் கிழித்ததாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதேநேரம் நேரம் மோதல் தொடர்பாக புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மெரினா காவல் நிலையத்தில் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதேபோல், விசிக மாநில துணைப் பொது செயலாளர் ரஜினிகாந்த், விசிகவினரை கத்தியால் தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விசிக நிர்வாகி திலீபன் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தரப்பு புகார்கள் தொடர்பாக, மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இரு தரப்பு மீதும் தவறுகள் இருந்ததால், மெரினா போலீசார் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளரான மயிலாப்பூர் ரூதர்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன், மயிலாப்பூர் பகுதி துணை செயலாளர் திலீபன் (எ) மகாதேவன், தென் சென்னை மாவட்ட செய்தி தொடர்பாளர் குமரப்பா, கட்சியின் உறுப்பினர் ஜாஹிர் உள்ளிட்ட 5 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திலீபன் (எ) மகாதேவன் அளித்த புகாரின் படி, புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டன.