விமான நிலையத்தில் தீ விபத்து: சென்னை-டாக்கா விமான சேவை பாதிப்பு
சென்னை: டாக்கா விமான நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் சென்னை-டாக்கா இடையே விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து டாக்காவுக்கு புறப்பட வேண்டிய விமானம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் உள்ள விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து டாக்கா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு 164 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. ஆனால் டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானிக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டதால், கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதுபோல நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு சென்னையில் இருந்து டாக்காவுக்கு செல்ல வேண்டிய பீமன் வங்கதேச ஏர்லைன்ஸ் விமானம் 187 பயணிகளுடன், சென்னையில் இருந்து டாக்காவுக்கு புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. டாக்காவில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததால், பீமன் வங்கதேச ஏர்லைன்ஸ் சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
விமானத்தில் ஏற்றப்பட்ட 187 பயணிகளும், விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டாக்காவில் நிலைமை சீரடைந்த பின்பு விமானம் மீண்டும் டாக்கா புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாக்காவில் நிலைமை எப்போது சீரடையும் என்று தெரியாத நிலையில், வங்கதேசம் போக வேண்டிய பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.