சென்னை விமான நிலையத்தில் எஸ்கலேட்டரில் 3 வயது குழந்தை கைவிரல் சிக்கியதால் பரபரப்பு: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை: சென்னையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு 8.50 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகள், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1 புறப்பாடு பகுதியில், இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுன்டர்களில் போர்டிங் பாஸ் போன்றவற்றை இரவு 7 மணியிலிருந்து வாங்க தொடங்கினர்.
இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்ய வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கணவன், மனைவி 2 குழந்தைகளுடன் இரண்டாம் தளத்திலிருந்து எஸ்கலேட்டர் வழியாக தரை தளத்திற்கு இறங்கி வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 வயது பெண் குழந்தையின் கை விரல் எஸ்கலேட்டரில் சிக்கி நசுங்கியது. வலி தாங்க முடியாமல் குழந்தை அலறித் துடித்தது. உடனே, எஸ்கலேட்டர் நிறுத்தப்பட்டது. குழந்தை மீட்கப்பட்டு விமான நிலைய தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
