இந்தியாவில் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்; காற்று மாசால் ஆண்டுக்கு 17 லட்சம் பேர் பலி: கடும் பொருளாதார சரிவால் பேரிழப்பு என தகவல்
புதுடெல்லி: இந்தியாவில் காற்று மாசால் ஏற்படும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச மருத்துவ இதழான ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரித்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாட்டின் தாக்கங்கள் குறித்து, 71 கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐ.நா. அமைப்புகளைச் சேர்ந்த 128 நிபுணர்கள் இணைந்து விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர். இது, 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38 சதவீதம் அதிகமாகும். இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, அதே காலகட்டத்தில் பதிவான கொரோனா நோய்த்தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. புதைபடிவ எரிபொருட்களைத் தொடர்ந்து சார்ந்திருப்பதே இந்தப் பேரழிவிற்கு முக்கியக் காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரியால் சுமார் 4 லட்சம் பேரும், சாலைப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் பெட்ரோலால் சுமார் 2.7 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், கிராமப்புறங்களில் சமையலுக்காக விறகு மற்றும் சாணம் போன்ற திட எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வீட்டு உபயோக மாசுபாடும் பெரும் அபாயமாகத் தொடர்கிறது.
இந்த மாசுபாட்டினால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டில் மட்டும், வெளிப்புறக் காற்று மாசுபாட்டினால் ஏற்பட்ட அகால மரணங்களால், இந்தியாவிற்கு 339 பில்லியன் டாலர்களுக்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீததிற்குச் சமமாகும். இந்த அறிக்கை, காலநிலை மாற்றத்தின் பிற தாக்கங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. 2024ம் ஆண்டில், சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் கிட்டத்தட்ட 20 நாட்கள் வெப்ப அலைகளை அனுபவித்ததாகவும், இதனால் 247 பில்லியன் மனித உழைப்பு நேரம் வீணானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த பத்தாண்டுகளில் நகர்ப்புறங்களில் பசுமைப் போர்வை 3.6 சதவீதம் குறைந்துள்ளதாலும், 1950ம் ஆண்டுகளிலிருந்து தீவிர வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு 138 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளதாலும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இதுபோன்ற அறிக்கைகளை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்திருந்தாலும், ‘காற்று மாசுபாட்டின் பேரழிவுத் தாக்கங்களுக்கான ஆதாரங்கள் வலுப்பெற்று வருகின்றன’ என்றும், ‘சுத்தமான காற்றுக்கான உத்திகளை தேசிய சுகாதாரம் மற்றும் வளர்ச்சித் திட்டமிடலில் ஒருங்கிணைக்க வேண்டும்’ என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.