விமானத்தில் பயணியிடம் நடிகை தகராறு: நேரில் அழைத்து சென்று போலீஸ் விசாரணை
அட்லாண்டா: அமெரிக்காவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகையான போர்ஷா வில்லியம்ஸ், விமானத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக எப்.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘தி ரியல் ஹவுஸ்வைவ்ஸ் ஆஃப் அட்லாண்டா’ மூலம் பிரபலமான நடிகை போர்ஷா வில்லியம்ஸ், தனது சக நடிகைகளுடன் லாஸ் வேகாஸில் நடைபெற்ற ‘பிராவோகான்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்டா விமானம் மூலம் அட்லாண்டாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது விமானத்தில் அவருக்கும், மற்றொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விமானப் பணியாளர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விமானம் அட்லாண்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், போலீசார் அங்கு தயாராக இருந்தனர்.
இந்தச் சம்பவம் தற்போது எப்.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அட்லாண்டா எப்.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘விமானத்தில் சக பயணியிடம் ஏற்பட்ட தகராறு தொர்பாக போர்ஷா வில்லியம்ஸிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
முன்னதாக விமானத்தில் இருந்து அதிகாரி ஒருவருடன் இறங்கி வந்த போர்ஷா வில்லியம்ஸ், எந்தவித பதற்றமும் இன்றி புன்னகைத்தபடியே விமான நிலையத்தை விட்டு வெளியேறிய காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்தச் சம்பவம் குறித்து போர்ஷா வில்லியம்ஸ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.