சென்னை - திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 3 மணி நேரம் தாமதமாக இயக்கம்: பயணிகள் அவதி
சென்னை: சென்னை - திருச்சி இடையே இயங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 3 மணிநேரம் தாமதமாக இயங்கியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், வழக்கமாக மாலை 6.50 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 7.50 மணியளவில் திருச்சி சென்றடையும்.
இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சி செல்லும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய, சுமார் 148 பயணிகள், நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையம், டெர்மினல் நான்கில் காத்திருந்தனர். அப்போது, விமானம் தாமதமாக புறப்படும், என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
சுமார் 3 மணிநேரம் காத்திருப்புக்கு பின் சென்னை - திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு 10.20 மணியளவில் புறப்பட்டு, இரவு 11.10 மணியளவில் திருச்சி சென்றடைந்தது. சென்னையில் இருந்து சென்ற விமானம் தாமதம் காரணமாக, திருச்சியில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானமும் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதில், பெரும்பாலானோர், விநாயகர் சதுர்த்தி விழாவை சொந்த ஊரில் கொண்டாட சென்ற நிலையில், குறித்த நேரத்தில் சென்னை வர முடியாததால் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ், ரயில் சேவையின்றி பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். இதையடுத்து, கால் டாக்ஸி மூலம் தங்களது வீடுகளுக்கு சென்றனர். சென்னை - திருச்சி - சென்னை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 3 மணி நேரத்துக்கு மேல் தாமதம் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.