காற்று மாசு; டெல்லியில் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு நேரத்தை ரத்து செய்தது அம்மாநில அரசு
டெல்லி: காற்று மாசு காரணமாக டெல்லியில் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு நேரத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதுதொடர்பான பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரணை நடத்திய போது, டெல்லிகாற்று மாசுக்கு ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவதும், கட்டட கட்டுமானங்களும் தான் காரணம் என டெல்லி அரசு கூறியிருந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டெல்லியில் கட்டுமானநடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், மாணவர்கள் இந்த பிரச்சினையாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. இந்த நிலையில், அதிகரிக்கும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதன்படி, அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது.மேலும் டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகளில் திறந்தவெளி மைதானங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை விளையாட தடை விதித்தது. மாணவர்களின் உடல்நலத்தை காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு விளக்கம் அளித்துள்ளது. விளையாட்டு போட்டியை நிறுத்திவைப்பது குறித்து ஆலோசிக்க காற்றுத்தர மேலாண் ஆணையத்தை நீதிமன்றம் கேட்டிருந்தது.