ஒன்றிணைய வாய்ப்பே இல்லை; அதிமுகவை துண்டு துண்டாக்க பாஜ பின்புலத்தில் செயல்படுகிறது: அடித்து சொல்லும் சண்முகம்ஒன்றிணைய வாய்ப்பே இல்லை; அதிமுகவை துண்டு துண்டாக்க பாஜ பின்புலத்தில் செயல்படுகிறது: அடித்து சொல்லும் சண்முகம்
திருவாரூர்: அதிமுக குழுக்கள் ஒன்றாக இணைய வாய்ப்பே கிடையாது. இதற்கு பின்னால், அதிமுகவை துண்டு துண்டாக ஆக்குவதில் பாஜ பின்புலத்திலிருந்து செயல்படுவதாக சண்முகம் தெரிவித்துள்ளார். திருவாரூரில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவிலிருந்து பிரிந்து போனவர்களெல்லாம் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக எடப்பாடிக்கு காலக்கெடு தீர்மானித்து அறிவித்துள்ள செங்கோட்டையனை எடப்பாடி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என பல குழுக்களாக இருக்கக்கூடிய அதிமுகவில் புதிதாக செங்கோட்டையன் குழு என மேலும் ஒரு குழு ஏற்பட வழி வகுத்திருக்கிறது. ஒட்ட வைக்கும் முயற்சி என்பதை விட இன்னொரு கோஷ்டி உருவாக வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக குழுக்கள் ஒன்றாக இணைய வாய்ப்பே கிடையாது. அனைவரும் அவரவர் சுயநலத்திலிருந்து இந்த பிரச்சனையை பார்க்கின்றனர். இதனால் அப்படியொரு சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், இதற்கு பின்னால், அதிமுகவை துண்டு துண்டாக ஆக்குவதில் பாஜ பின்புலத்திலிருந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை அதிமுகவில் இருப்பவர்கள் உணரவேண்டும். அதிமுக, பாஜ சந்தர்ப்பவாத கூட்டணி. கொள்கை வேறு, கூட்டணி வேறு என எடப்பாடியே சொல்லிக்கொண்டிருக்கிறார். பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அமைக்கக்கூடிய கூட்டணியில் இருக்ககூடியவர்கள் இப்படித்தான் செல்வார்கள். அதனால் பாஜ, அதிமுக கூட்டணி மேலும், மேலும் பலவீனமடைந்து கொண்டிருக்ககிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அந்நிய முதலீட்டை பெறும் முயற்சியில் ஆண்டுதோறும் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். தற்போது ஜெர்மனி, லண்டன் பயணம் வாயிலாக ஓரளவிற்கு முதலீடு கிடைத்துள்ளது. முதல்வரின் இந்த முயற்சி வரவேற்கதக்கதாகும். அபரிதமான வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இதனால் கடுமையான விளைவுகள், பொருளாதார நெருக்கடி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி நகரமான திருப்பூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை என்பதை அங்குள்ள நிறுவனங்கள் எடுத்துள்ளன. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜவுளி, தோல், கடல் உணவுகள், வைரம் நகை தயாரிப்பு உள்ளிட்ட ஏற்றுமதி செய்யக்கூடிய எல்லாத்தொழிலுமே கடுமையான பாதிப்பிற்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.