அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கம். ஓ.பி.எஸ்., டிடிவி தினகரனுடன் சேர்ந்து பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து செங்கோட்டையன் மீது நடவடிக்கை.
மேலும் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில்; "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகத்தில் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து சுழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி சுழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாளை காலை செய்தியாளர்களை சந்தித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கிறேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கட்சி அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிப்பதாக செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.
