பாஜ தலைவர்களுடன் 3 முறை சந்திப்பு; அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை தொடங்கிவிட்டது: செங்கோட்டையன் தடாலடி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்றிரவு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அதிமுக தொண்டர்கள், உரிமை மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒருங்கிணைந்த அதிமுக என்பதை விரைவில் எதிர்பார்க்கலாம். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது நல்ல முடிவாக இருக்கும். பாஜ என்னை அழைத்து எந்த இன்ஸ்ட்ரக்சனும் கொடுத்ததில்லை. நான் பாஜ தலைவர்களை நேரில் பார்த்தேன். அப்போது பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டது. அதனை இங்கு பகிர்வது அரசியல் நாகரிகமாக இருக்காது. பாஜ தரப்பில் அழைக்கப்பட்டே சென்றேன் என சொன்னேன்.
ஒரு முறை அழைத்தார்கள், 2வது முறை நானே சந்தித்தேன். மூன்று முறை இதுவரை சந்தித்துள்ளேன்’’ என்று கூறினார். தொடர்ந்து நிருபர்கள், ‘‘அதிமுகவில் இணைவீர்களா?’’ என்றதற்கு, ‘‘மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார். ‘‘நீங்கள், டிடிவி.தினகரன் இணைந்து விஜய்யுடன் கூட்டணி வைக்க போகிறீர்களாமே?’’ என கேட்டதற்கு, ‘‘கூட்டணி குறித்து எந்த கருத்தும் சொல்ல இயலாது. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே ஆசை. அந்த ஆசை நிறைவேறும் காலம் வெகுவிரைவில் உள்ளது. ஒருங்கிணைப்பு எப்போது நடக்குமென பொறுத்திருந்து பாருங்கள்’’ என்றார். பின்னர் அவர் மீனாட்சி கோயிலுக்குள் சென்று அம்மன், சுவாமி தரிசனம் முடித்து கிளம்பிச் சென்றார்.