அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனால் ரூ.1.40 லட்சம் கோடி வட்டி கட்டுகிறோம்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
சென்னை: சேராத இடங்களில் நீங்கள் சேர்ந்து விட்டீர்கள். அணுகுமுறை என்பது தமிழகத்தை ஒன்றிய அரசிடம் அடமானம் வைப்பதாக ஆகி விடக்கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அதிமுகவுக்கு பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: எங்களது உறுப்பினர்கள் நேற்று கருப்புப்பட்டை அணிந்து வந்ததை கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி, கைதிகள் அடையாளம் என்பதை போன்று பேசினார். இது எங்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துள்ளது. அந்த சொற்கள் அவைக்குறிப்பில் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நேற்று அமைச்சர் ரகுபதி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள்.
சபாநாயகர் அப்பாவு: நேற்று எதை நீக்க வேண்டும் என நீங்கள் (அதிமுக) கூறுங்கள் என கேட்டேன். ஆனால், நீங்கள் பதில் சொல்லவில்லை. வெளிநடப்பு செய்து விட்டீர்கள். நான் அமைச்சர் பேசியதை கவனிக்கவில்லை. அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கிறேன். முதல்வர் கூறிவிட்டார். அதனால், அந்த வார்த்தைகள் நீக்கிவிடுகிறேன். அதேபோல் நீங்கள் நேற்று கருப்பு பட்டை கட்டிக்கொண்டு வந்தீர்கள் அப்படி கட்டிக்கொண்டு வரக்கூடாது என்பது இந்திய ஜனநாயக நாடாளுமன்ற மரபு. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதையெல்லாம் அனுமதிக்க கூடாது என அங்கு கூறியுள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமி: நடுநிலையோடு செயல்பட வேண்டிய சபாநாயகரான நீங்களும் எங்களுக்கு பிபி வந்துள்ளதா என கேட்டீர்கள். இது எல்லாம் சரிதானா? எதிர்க்கட்சி பேசினால் உன்னிப்பாக கவனிக்கிறீர்கள், ஆளுங்கட்சி பேசினால் கண்டுகொள்வதில்லை.
அதிமுக உறுப்பினர் தங்கமணி: தமிழகம் இப்போது அதிக கடன் சுமையில் உள்ளது. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது. இதனால், மாநிலத்துக்கு வர வேண்டிய வருவாயும் குறைந்துவிடும். மற்ற திட்டங்களை நீங்கள் எப்படி நிறைவேற்றுவீர்கள்? வருவாய் பற்றாக்குறை அபாயம் உள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: அதிமுக ஆட்சியில் 128 சதவீதம் கடன் அளவு அதிகரித்தது. ஆனால், கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் 93 சதவீதமே கடன் வளர்ச்சி வீதம். அதிமுகவை விட திமுக ஆட்சியில் குறைவுதான். தமிழகத்தின் கடனுக்கு தமிழக அரசின் நிதி நிர்வாகம் காரணமல்ல. நீங்கள் (அதிமுக) இப்போது சேர்ந்துள்ள இடம்தான் காரணம். அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையே காரணம். சேரக் கூடாத இடம் சேர்ந்துள்ளீர்கள். உங்களது நட்பை பயன்படுத்தி தமிழகத்திற்கு தரவேண்டிய நிதி பெற்றுத்தாருங்கள்.
தங்கமணி: அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சி வரிசையில் தங்கம் தென்னரசு பேசினால் முழுமையாக பேச அனுமதிக்குமாறு ஜெயலலிதா சொல்வார். அப்படிப்பட்டவர் இன்று அதிக அளவு கோபமாக பேசுகிறார். கொள்கை என்பது வேறு, அணுகுமுறை என்பது வேறு. கொள்கை என்பதை அரசியலோடு வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசுடனான அணுகுமுறையில் கொள்கையை கொண்டுவரக் கூடாது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தது. என்றாலும் நிதியை கேட்டு பெற்றோம்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: அணுகுமுறை என்பது தமிழகத்தை அடமானம் (ஒன்றிய அரசிடம்) வைப்பதாக ஆகி விடக்கூடாது.
தங்கமணி: நீங்கள்தான் இப்போது தமிழ்நாட்டு மக்களை அடகு வைத்து கொண்டிருக்கிறீர்கள்.
எடப்பாடி பழனிசாமி: உங்களிடம் 39 எம்பிக்கள் உள்ளனர். எங்களிடம் ஒரு எம்பியும் இல்லை. எங்கள் ஆட்சியில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை தாமதப்படுத்தும்போது 22 நாட்கள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தோம். அதேபோல் நீங்கள் செய்யுங்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மக்கள் உங்களுக்கு ஆதரவு தரவில்லை. நான் பிரதமரை சந்திக்கும் போதும் சரி, முதல்வர்கள் கூட்டத்திலும் சரி, நிதி சம்பந்தமாக மனுக்கள் அளித்துக் கொண்டே தான் இருக்கிறோம். நீங்கள் புதிதாக சேர்ந்த இடத்தில் கூறி நிதியை தர சொல்லுங்கள்.
எடப்பாடி பழனிசாமி: நான் ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்திக்கும்போது 100 நாள் திட்டத்திற்கு தரவேண்டிய நிதியை தாருங்கள் என கூறினேன். இதை அடுத்துதான் ரூ.3000 கோடியை விடுவித்தார்கள்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்காக மட்டும் நாங்கள் ரூ.1.40 லட்சம் கோடி வட்டி மட்டும் கட்டி வருகிறோம். இந்த கடனுக்கெல்லாம் காரணம் தமிழகத்தின் நிதி நிர்வாகம் அல்ல, ஒன்றிய அரசு நிதி தராததுதான் காரணம். சேராத இடங்களில் நீங்கள் சேர்ந்து விட்டீர்கள். அவர்கள் நிதி தராதது தான் கடனுக்கு காரணம்.
அமைச்சர் பெரியசாமி: நீங்கள் சொன்னதால் ரூ.3 ஆயிரம் கோடி விடுவிக்கப்படவில்லை. முதல்வர் அழுத்தம் கொடுத்ததால்தான் ரூ.3 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் கொரோனா காலமாக இருந்தது. எந்த வரி வருவாயும் இல்லாமல் இருந்தது அதனால் அதிகமான செலவு வந்தது.
அமைச்சர் மூர்த்தி: கொரோனா காலத்தில் வருவாய் வரவில்லை என்பது தவறு. ரூ.96,000 கோடி வருவாய் வந்தது. இவ்வாறு விவாதம் நடந்தது.