நெல்லிக்குப்பம் ஊராட்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக ஊராட்சி தலைவர்
திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவரான பார்த்தசாரதி (எ) பாஸ்கர் அதிமுகவை சேர்ந்தவர். இவர், திருப்போரூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் இருந்து வந்தார். திருப்போரூர் ஒன்றிய அதிமுகவில் முக்கிய புள்ளியாக விளங்கிய பாஸ்கர், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நேற்று அதிமுக ஊராட்சி தலைவர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஒன்றியக்குழு தலைவருமான எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார். க.செல்வம் எம்பி முன்னிலை வகித்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், பார்த்தசாரதி (எ) பாஸ்கர் திமுகவில் இணைந்தார். அவருக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
மேலும், நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வி சீனிவாசன், 1வது வார்டு உறுப்பினர் சித்ரா விஜயராகவன், 4வது வார்டு உறுப்பினர் ராமன், 9வது வார்டு உறுப்பினர் ஜெயலட்சுமி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். அனைவருக்கும் உரிய நேரத்தில் தகுந்த பதவிகள் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து, நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மீதமுள்ள 5 வார்டு உறுப்பினர்களும் விரைவில் திமுகவில் இணைய உள்ளனர் என்று அமைச்சரிடம் பார்த்தசாரதி (எ) பாஸ்கர் உறுதியளித்தார். அதிமுகவின் முக்கிய புள்ளியை திமுகவில் இணைத்த ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மனுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பாராட்டு தெரிவித்தார்.
இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அன்புசெழியன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், முட்டுக்காடு மயில்வாகனன், ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார், நெல்லிக்குப்பம் ஊராட்சி நிர்வாகிகள் கெஜராஜன், பார்த்திபன், அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.