அதிமுகவில் இருந்து யார் யார் வருவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்: மனோஜ்பாண்டியன் பதில்
நெல்லை: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் கடந்த 4ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அன்று மாலையே தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் நெல்லை வந்த அவர், நெல்லை மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நெல்லை மேற்கு ஆவுடையப்பன், மத்திய மாவட்டம் அப்துல்வகாப் எம்எல்ஏ, கிழக்கு மாவட்டம் கிரகாம்பெல் ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாவட்ட பொறுப்பாளரை சந்திப்பதற்காக வந்தேன்’’ என்றார். அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா, மனோஜ்பாண்டியனை தொடர்ந்து மேலும் எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதா? என அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார். அதிமுக பல்வேறு அணிகளாக சிதறியுள்ள நிலையில் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், மனோஜ்பாண்டியன், பொறுத்திருந்து பாருங்கள் என கூறியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.