அதிமுகவில் இருந்து மேலும் பல தலைவர்கள் திமுகவுக்கு வருவார்கள்: மைத்ரேயன் தகவல்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் நிருபர்களிடம் கூறியதாவது: மண், மொழி, மானம் காக்க தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். களத்தில் தளபதி இருப்பதால், தமிழ்நாட்டு மக்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள். அதில் என்னையும் ஒரு சிப்பாயாக இணைத்துக்கொண்டு திமுகவில் இணைந்துள்ளேன். 2026 தேர்தலில் திமுக வெற்றி, நிச்சயிக்கப்பட்ட ஒன்று. தளபதி, கோட்டையில் நாளை தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.
அடுத்த ஆண்டும் தளபதிதான் கொடியேற்றுவார். நடைபெறும் தேர்தலில் 2வது இடத்தில் யார் வருவார்கள் என்பதற்குத்தான் போட்டி. அதிமுக போக்கு சரியானதாக இல்லை. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலும், பாஜ கூட்டணியில் அதிமுக இருக்கிறது என்று அறிவித்தது அமித்ஷா தான். கூட்டணி ஆட்சி என்கிறார்கள், குறைந்தபட்ச செயல்திட்டம் என்கிறார்கள். மொழி, இருமொழி, கல்வி கொள்கையில் குறைந்தபட்சமாக என்ன திட்டம் வைத்துள்ளனர் என்று அறிவிக்க வேண்டும்.
அதிமுக - பாஜ கூட்டணியினர் எந்த அடிப்படையில் இணைந்து செயல்படுவார்கள். இதனால் அதிமுக முன்னணி நிர்வாகிகள் மனகுழப்பத்தில் உள்ளனர். ஒரு சில நிர்வாகிகள் அதிமுக கட்சியை கையில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். அதிமுகவில் அமைப்பு செயலாளர் பதவி எனக்கு தந்தார்கள், என்னை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்னும் பல தலைவர்கள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வருவார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பது சகஜம்தான்.
திமுக கூட்டணியை தளபதிதான் முடிவு செய்வார். ஆனால் அதிமுகவில் முடிவு எடுக்கும் அதிகாரம் டெல்லியில் இருக்கிறது. ஒருவேளை ஆட்சிக்கு அதிமுக வந்தால், அதுவும் அத்தைக்கு மீசை முளைத்தால் தான் அது நடக்கும். அப்படி வரும்போது பாஜவின் தலையீடு எந்தளவுக்கு இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். 2026ம் ஆண்டு தேர்தல் தளபதி தலைமையில் 200 சீட்டை தாண்டி வெற்றிபெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதிமுகவில் ஒருமித்த கருத்து இல்லை, முன்னணி தலைவர்களை பயன்படுத்த தவறி விட்டார்கள். மண், மொழி, மானம் காக்க ஒரு அணியில் இணைவோம். நான் ஒரு இயக்கத்தில் சந்தோஷமாக இருந்தால் நிச்சயமாக மாற மாட்டேன். அதனால் அடுத்த இலக்கை நோக்கி செல்கிறேன். எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை கூட்டி வருகிறார்கள். அதை பார்த்து, தன்னை எம்ஜிஆர், ஜெயலலதா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. இவ்வாறு அவர் கூறினார்.