அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
தென்காசி: 2026 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சி சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அதிமுக தொண்டர்கள், பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி; அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியாவிலேயே கொரோனாவை விரைவில் தடுக்க நடவடிக்கை எடுத்த மாநிலம் தமிழ்நாடு. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து தென்காசியை புதிய மாவட்டமாக உருவாக்கியது அதிமுக அரசாங்கம். அதிமுக ஆட்சியில் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி. அதிமுக அரசில் கல்வியில் சாதனை படைத்தோம், கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன.
2026 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்ததும் 4,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும். அதிமுக ஆட்சியில் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். அதிமுக ஆட்சியில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு மீண்டும் சிறப்பாக வழங்கப்படும். இலவச வேட்டிச் சேலை திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். தீபாவளி அன்று மகளிருக்கு சிறப்பான சேலை வழங்குவோம் என்றும் கூறினார்.