அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்; செப்.5ஆம் தேதி முடிவை அறிவிப்பேன்: செங்கோட்டையன் பரபரப்பு அறிவிப்பு
ஈரோடு: 5ம் தேதி மனம் திறந்து பேசப்போகிறேன், அதுவரை அனைவரும் பொறுத்திருங்கள் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டினார் செங்கோட்டையன். எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் பாஜக தலைவர்களை செங்கோட்டையன் சந்தித்து திரும்பிய பின்னரே அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு வெளியானது
எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் பழனிசாமி பிரச்சார பயணம் சென்ற போது செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனிடையே அதிமுக மூத்த அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தனது தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் நடக்கும் கூட்டத்தில் நான் மனம் திறந்து பேசவுள்ளேன். 5ஆம் தேதி அனைத்து தகவலும் தெரிவிக்கப்படும். மனம் திறந்து பேசவுள்ளேன்; அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்று கூறினார்.