அதிமுகவில் இருந்து மாஜி எம்எல்ஏ விலகல்
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜ, அதிமுக கூட்டணி அமைத்து கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கிறது, ஆனால் தொகுதி பங்கீடு என்ற அளவில் இருக்காது என பாஜ மேலிடப்பொறுப்பளர் சுரானா ஒரு பேட்டியில் மறைமுகமாக தெரிவித்திருந்தார். இதனால் அதிமுகவிக்கு குறைந்த தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. அதிமுகவின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த நிர்வாகிகள் கட்சி தாவி வருகின்றனர். இதனால், புதுச்சேரியில் அதிமுக பெரியளவில் செயல்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் கட்சியில் முக்கிய பொறுப்பாளராக செயல்பட்டு வந்த முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இவர் காங்கிரஸ் அல்லது பாஜவுக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது.