அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும்; ஆட்சியில் பங்கு கொடுக்க நான் ஏமாளி அல்ல; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு: பாஜ தலைவர்கள் அதிர்ச்சி
மக்களவை தேர்தல் நேரத்தில் பாஜ கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறி தனி அணி அமைத்து போட்டியிட்டது. பாஜவும் 21 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில் இரு அணிகளுமே தோல்வியை தழுவின. இந்நிலையில், கூட்டணியில் கண்டிப்பாக சேர்ந்தே ஆக வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடியை டெல்லிக்கு அழைத்து நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் சோதனைகளை நடத்தின. அதில் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சூழ்நிலையில், பாஜ கூட்டணியில் சேர எடப்பாடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சென்னையில் நீண்ட கருத்துதான் எங்களுக்கு வேத வாக்கு என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும் கூறிவிட்டார். ஆனால், எடப்பாடியோ, அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்து வந்தார்.
அமித்ஷாவின் பேச்சை தொடர்ந்து பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைச்சரவை வேண்டும் என்று கேட்க தொடங்கின. இது எடப்பாடி பழனிசாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கூட்டணி அமைச்சரவை தான் என்று வலியுறுத்திய பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, இதில் எடப்பாடிக்கு கருத்துவேறுபாடு இருந்தால், அவர் அமித் ஷாவிடம் பேச வேண்டும் என்று கூறினார். இதுவும் எடப்பாடிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர் இறுதியாக இரவு திருத்துறைப்பூண்டியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: எனது சம்பந்தி வீட்டில் ரெய்டு நடந்ததால் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளேன் என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார். எனது சம்பந்தி வீட்டில் ரெய்டு நடக்கவில்லை. உறவினர் வீட்டில் ரெய்டு நடந்ததற்கும், எனக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.
பாஜவுடன் கூட்டணி வைத்ததை விமர்சனம் செய்கின்றனர். கூட்டணி வைத்தால் என்ன தவறு. பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்ததுமே திமுகவும், கூட்டணி கட்சிகளும் அச்சமடைந்து விட்டன. எங்களுக்கு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதற்கு ஒன்று சேர்ந்து வருகிற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம். அதிமுக தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமையும். இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் வந்து இணையவுள்ளன.
ஆட்சியில் பங்கு கொடுக்க நான் ஒன்றும் ஏமாளி அல்ல. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேணும்னா வேணும். வேண்டாம்னா வேண்டாம். அதைப்பத்தி கவலை இல்லை. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எங்களைப் போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும். அதுதான் என் நிலைப்பாடு. இன்னும் சில கட்சிகள் வர இருக்கிறது. சரியான நேரத்தில் வரும். ஸ்டாலின் அவர்களே 200 சீட்டில் ஜெயிப்பதாக சொல்கிறீர்கள். நிஜத்தில் 210 தொகுதிகளை அதிமுக கூட்டணி தான் ஜெயிக்கும்.கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக தான் தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது. பங்கு கொடுக்க நான் ஏமாளி அல்ல என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அமித் ஷா உள்ளிட்ட பாஜ தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கலைந்து சென்ற கூட்டம்;
திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே இரவு 8 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து மினி வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பணம் கொடுத்து ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இரவு 8 மணிக்கு தான் எடப்பாடி பேசுகிறார் என்ற போதும் மாலை 4 மணி முதலே அதிமுகவினரால் அழைத்து வரப்பட்டவர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தில் காத்திருந்தனர். ஆனால் இரவு 9.15 மணிக்கு தான் எடப்பாடி பழனிசாமி திருத்துறைப்பூண்டிக்கு வருகை தந்தார். பின்னர் அவர் அங்கு பேச தொடங்கிய போது பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் பெருமளவில் கலைந்து செல்ல தொடங்கினர். இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.