அதிமுகவை சிதைக்க வந்த கூலிப்படைகள் எடப்பாடிக்கு பலவீனம் ஏற்படுத்த சலசலப்பு தரும் செல்லாக்காசுகள்; ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் மீது மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு
மதுரை: எடப்பாடிக்கு பலவீனம் ஏற்படுத்த சலசலப்பு தரும் செல்லாக்காசுகள், அதிமுகவை சிதைக்க வந்த கூலிப்படைகள் என்று ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையனை மறைமுகமாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கி வீடியோ வெளியிட்டுள்ளார். மதுரையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது: அதிமுகவை 1972ல் எம்ஜிஆர் தொடங்கினார். அவரது மறைவிற்கு பின்பு ஜெயலலிதா நாட்டின் மூன்றாம் பெரிய இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். இருபெரும் தலைவர்கள் வடிவமாக, எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்திற்கு பொக்கிஷமாக கிடைத்தார். இதுவரை 150 தொகுதிகளுக்கு மேல் எழுச்சி பயணம் மேற்கொண்டு 65 லட்சம் மக்களை சந்தித்துள்ளார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், இருபெரும் தலைவர்கள் விலாசத்தை பெற்றவர்கள், கூலிப்படையாக செயல்பட்டு அதிமுகவின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து இன்றைக்கு தோற்றுத்தான் போனார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக்காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால் தொண்டர்கள் சொத்தான அதிமுகவிற்கு சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது. தாய் இல்லாத பிள்ளையாக நாம் இருந்தபோது, தாயாக நமக்கு கிடைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவர் கரத்தை வலுப்படுத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு பலவீனத்தை ஏற்படுத்த, சலசலப்பை ஏற்படுத்தும் சில செல்லாக்காசுகளால் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுகிறார்கள். அவர்கள் முகத்திரையை கிழித்து எறிய வேண்டும். இவ்வாறு பேசியுள்ளார்.