அதிமுகவில் சேர்க்க சொல்லி சி.வி.சண்முகம் வீட்டு வாசலில் யார் நின்றா? ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
அவனியாபுரம்: அதிமுகவில் சேர்க்க சொல்லி சி.வி.சண்முகம் வீட்டில் வாசலில் யார் நின்றா? என்று ஓபிஎஸ் பதிலடி கொடுத்து உள்ளார். சென்னையில் இருந்து நேற்று மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பிரிந்து போனவர்கள் வருவதை வரவேற்கிறோம் என கூறியுள்ள வைகைச்செல்வன், இப்போது எந்த கட்சியில் இருக்கிறார்? என்ன பொறுப்பில் இருக்கிறார். கூட்டணி குறித்து பேச அவருக்கு அதிகாரம் உள்ளதா என பார்க்க வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் இருக்கிறது. அதற்குள் அவசரப்பட வேண்டாம். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேருங்கள் என்று சி.வி.சண்முகம் வீட்டு வாசலில் யார் நின்றது. திமுக தான் எதிரி என விஜய் கூறுவதற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும். விஜய்யுடன் சேர்வது வதந்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். விஜய்க்கு கூட்டம் கூடுகிறது, அதை மறுக்க முடியாது. ஆனால் அது வாக்காக மாறுமா என்பதை தேர்தலுக்குப் பிறகு பதிவான வாக்குகளை எண்ணிய பிறகு தான் சொல்ல முடியும்’’ என்றார்.
* கூட்டணிக்கு அண்ணாமலை அழுத்தமா?
‘‘அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் செல்வீர்களா’’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ‘‘இதற்கு தற்போது நான் பதில் சொல்ல விரும்பவில்லை’’ என நழுவலாக பதிலளித்தார்.