அதிமுகவுடன் கூட்டணி வைத்து உள்ளதால் தமிழ்நாட்டில் பாஜவின் வாக்கு திருட்டு நடக்கும்: நெல்லை காங். மாநாட்டில் ப.சிதம்பரம் எச்சரிக்கை
நெல்லை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ‘வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து பிரமாண்ட மாநாடு பாளையங்கோட்டையில் நேற்று மாலை நடந்தது. மாநாட்டிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் வாக்கு திருட்டுக்கு கைப்பாவையாக இருந்த இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டனம் தெரிவிப்பது, வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்ற மோடி அரசு பதவி விலக வலியுறுத்துவது உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் காங்., மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் பேசியதாவது: கர்நாடகவில் நடந்த வாக்கு திருட்டு மோசடியை ராகுல்காந்தி வெளிக்கொண்டு வந்தார். கர்நாடகா, மகராஷ்டிராவை தொடர்ந்து தற்போது பீகாரிலும் இந்த வாக்கு திருட்டு நடந்துள்ளது.
கேரளாவிலும் தமிழகத்திலும் திராவிட கட்சிகள், காங்கிரஸ், இடதுசாரிகள் வலுவாக இருப்பதால் இந்த வாக்கு திருட்டு நடக்கவிடமாட்டோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிமுக பாஜ கூட்டணியில் இணைந்துள்ளதால் தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடக்கலாம். எனவே தமிழக மக்கள், காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்போடு இருங்கள். வாக்காளர் பட்டியல் உங்கள் கையில் இருக்க வேண்டும். ஆமை புகுந்த வீடும், ஆமினா புகுந்த வீடும் உருப்படாது என்று தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அதேபோல் பாரதிய ஜனதா கட்சி புகுந்த மாநிலம் உருப்படாது. இவ்வாறு அவர் பேசினார். செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘குஜராத் மாடல் மாதிரி இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் ஜொலிக்க போவதாக பாஜவினர் சொன்னார்கள். 2014ல் குஜராத் மாடலை கூறியே மத்தியில் ஆட்சியை பிடித்தனர்.
2019ல் தீவிரவாத தாக்குதலை காரணம் காட்டி ஆட்சியை பிடித்தனர். திருட்டும், புரட்டும் செய்தே பாஜ ஆட்சிக்கு வந்தது.இப்போது 3வது முறையாகயாக போலி வாக்குறுதிகளை கொடுத்தே பாஜ ஆட்சிக்கு வந்துள்ளது’ என்றார்.