இந்தியா முழுவதும் பிளவுகளை ஏற்படுத்துகிறது; அதிமுகவில் நடக்கும் பிரச்னை பின்புலத்தில் பாஜ இருக்கலாம்: துரை வைகோ சந்தேகம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மதிமுக நிர்வாகி இல்ல விழாவிற்கு நேற்று வந்த கட்சியின் முதன்மை செயலாளரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் நீக்கம் என்பது அதிமுகவின் முடிவு. உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை. கடந்த காலங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கூட்டணியில் பிளவுகளை பாஜ ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதனால் அதிமுக பிரச்னையின் பின்புலத்தில் பாஜ இருக்குமோ என சந்தேகம் வருகிறது. மற்ற கட்சிகளை பலவீனப்படுத்துவதை பாஜ தொடர்ந்து செய்து வருகிறது. இது தவறான விஷயம். ஜனநாயகத்திற்கு புறம்பானது. தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடமையை செய்து வருகிறார். இதற்கு முன்பும் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்.
இது வரவேற்கத்தக்கது. டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறும் குற்றச்சாட்டுக்கு தரவுகள் வேண்டும். மதுரை மாநகராட்சியில் தவறு செய்த அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கமும் செய்துள்ளனர். தவறே இல்லாமல் அரசாங்கம் நடத்துவது கஷ்டம். சசிகலா சர்க்கரை ஆலை பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. சிபிஐ விசாரணைக்கு சென்று நீதிமன்றத்திலும் தீர்ப்புகள் வந்துள்ளது. அதை அரசியல் காரணம் எனக்கூற முடியாது. திமுகவில் நீடிக்கிறோம், தொடர்ந்து நீடிக்க விரும்புகிறோம். திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தால் கூட்டணி பலமடையும். எங்களுக்கும் சந்தோஷம் தான். இவ்வாறு தெரிவித்தார்.