தலைவர்கள் இணையாவிட்டால், தொண்டர்கள் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னை: தலைவர்கள் இணையாவிட்டால், தொண்டர்கள் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அண்ணாவின் 117வது பிறந்தநாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதையை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களளுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக சட்டவிதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மக்கள் மனநிலைகளை உணர்ந்து அதன்படி செயல்பட உறுதி ஏற்க வேண்டும். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி, சட்டவிதிகளை உருவாக்கித் தந்துள்ளார்.
அதிமுக சட்டவிதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டனர். இது தொடர்பாக 6 வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பிரிந்து இருக்கும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும். தலைவர்கள் இணையாவிட்டால், தொண்டர்கள் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்கள். செங்கோட்டையனை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்பு உள்ளது. செங்கோட்டையனுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. எதுவும் நடக்கலாம். இவ்வாறு தெரிவித்தார்.