சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. 2026 சட்டமன்ற தேர்தல், பூத்கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
2026 காணச் சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி அமைத்து உள்ளது. இன்னும் தேர்தல் நடைபெற 8 மாதங்களே உள்ளது. இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும் அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனது கட்சியை வலுப்படுத்த இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி பெயரைக் கூறாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூசகமான பதில்களைக் கூறி வருகிறார். ஆனால் இதற்கு அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அதிரடியாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் ’’மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, 118 சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்று கட்டங்களாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அதாவது செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மதுரை மாவட்டத்திலிருந்து தன்னுடைய நான்காவது கட்ட சுற்றுப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்திற்கு அதிமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அளித்து வருகின்றனர்.
மேலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுவரை 118 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட பிரச்சார அனுபவங்கள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 2026 காணச் சட்டமன்றத் தேர்தல் பணிகள் அதிமுக வாக்குச்சாவடிக்குழு மற்றும் கூட்டணி மீதான விமர்சனம், கூட்டணியை வலுப்படுத்துவது உள்ளிட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் அணைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.