அதிமுக-பாஜ கூட்டணியில் தமாகாவுக்கு கூடுதல் இடங்கள் கேட்போம்: ஜி.கே.வாசன் பேட்டி
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணியில் தமாகாவுக்கு கூடுதல் இடங்களை கேட்போம் என்று ஜி.கே.வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கறிஞர் அணி சார்பில், தமாகா தேர்தல் ஆலோசனை கூட்டம் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், துணைத் தலைவர்கள் விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாஷா, தமாகா வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மகாதேவன், வாசுகி, விஜய சேகர், வழக்கறிஞர் ராஜம் எம்பி நாதன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகளுடன் சந்திக்க தயாராகி வருகிறோம். தேர்தல் களத்தில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு வழக்கறிஞர் பிரிவு முக்கிய பங்கு வகிக்கும். தமாகா சட்டமன்ற உறுப்பினர்களின் குரல் சட்டப் பேரையில் ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறோம். கரூர் சம்பவத்தில் குழப்பங்கள் தீர்க்கப்பட்டு உண்மை வெளிக் கொண்டு வர சிபிஐ விசாரணை தேவை. அதிமுக, பாஜ கூட்டணியில் முக்கிய அங்கமாக செயல்பட்டு வருகிறது. தமாகாவை போன்று ஒத்த கருத்துடைய பல கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப் பயணத்திற்கு தமாகா தலைவர் என்ற முறையில் எனக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பின் பெயரில் நயினார் நாகேந்திரனின் மதுரை சுற்றுப்பயண பிரசாரத்தில் கலந்துகொள்கிறேன். கூட்டணியில் தமாகாவுக்கு கூடுதல் இடம் கேட்பீர்களாக என்கிறீர்கள். அதற்கான அதிகாரப்பூர்வ நேரம், காலம் இருக்கிறது. அப்போது நாங்கள் அதிகாரப்பூர்வமாக பேசுவோம். கூடுதல் இடங்களை எதிர்பார்க்க விருப்பம் இல்லாமல் கட்சி நடத்த முடியுமா? விருப்பம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.