ஜெயிச்ச அடுத்த நிமிஷம் அதிமுகவை மறந்துட்டு பாஜக கூட்டணிக்கு தாவிட்டாங்க: பாமகவை விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!!
சட்டமன்ற தேர்தலுக்கு முன் பாஜக உடனான கூட்டணி குறித்து அதிமுகவின் நிலைப்பாடு மாறி வருகிறது.
அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் பரஸ்பரம், நாங்கள் இருவருமே எதிரி கட்சிகளே இல்லை; எங்கள் இலக்கு திமுகதான் என கூறி இரு கட்சிகளும் 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியாக களம் காண தயாராகிவிட்டன என்பதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட துவரிமான் பகுதியில் அமைந்திருக்கும் சமுதாய கூடம் அருகே பேவர் பிளாக் பதிப்பதற்கான பூமி பூஜையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்;
பாமக தலைவர் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வழங்கினோம். மாநிலங்களவை சீட் வழங்கிய அதிமுகவை மறந்துவிட்டு, பாஜகவுக்கு தாவினார். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுப்பார். அதிமுக, திமுக என்ற பெரும் கட்சிகளின் தலைமையைத்தான் மக்கள் விரும்புவார்கள். அதனால் கூட்டணிக் கட்சிகளை எவ்வாறு அரவணைப்பது என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். தேமுதிக விவகாரத்தை அவர் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். நாளைக்கு உயிரை விடப் போகிறோமென்று இன்று போய் சுடுகாட்டில் படுக்க முடியுமா? என அதிமுக - பாஜக கூட்டணியா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார்.