அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்: எடப்பாடி பழனிசாமி
திருப்பத்தூர்: யாரை சந்திப்பது என்று முடிவெடுக்க வேண்டியதும்; கூட்டணியில் யாரை இணைப்பது என்பதை முடிவெடுக்க வேண்டியதும் நாங்கள்தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த 7ம் தேதி தொடங்கினார். இந்த நிலையில் இன்று திருப்பத்தூரில் உள்ள தனியார் உணவகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; கூட்டணியில் யாரை இணைப்பது என்பது உள்பட எந்த முடிவாக இருந்தாலும் அதை அதிமுகதான் எடுக்கும்.
பாஜக அதிமுக கூட்டணியில் மீண்டும் ஒ.பி.எஸ் இணைவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் கூறி வந்தார். டிடிவியும் ஒ.பி.எஸ். உடன் தேசிய பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பது எந்த காலத்திலும் நடக்காது என்று கூறி, கூட்டணியில் ஒ.பி.எஸ். இணைவார் என நயினார் கூறி வந்த நிலையில் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், நானும் டிடிவியும் ஒன்றாக மேடை ஏறுவோம் என்று நயினார் நாகேந்திரன்தானே கூறினார். அதைப்பற்றி அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
மேலும், அன்வர் ராஜா மற்றும் மைத்ரேயன் நீக்கம் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், கட்சியின் விதிகளை மீறுபவர்கள் கட்சியில் இருந்து அகற்றுவதும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பதும், தமிழக அரசியல் வரலாற்றில் புதிதல்ல. அரசியல் கூட்டணிகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டுமே பதில் அளிக்க முடியும். கூட்டணியை முடிவு செய்ய 8 மாத காலம் உள்ளது. மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என்றார்.