அதிமுக கூட்டணியை அமித்ஷா தான் இயக்குகிறார்; தமிழகத்தில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்: சட்டப்பேரவை காங். தலைவர் ராஜேஷ்குமார் பேட்டி
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதியார் உருவப்படத்திற்கு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக கூட்டணியை அமித்ஷா தான் இயக்குகிறார். அவர்களுக்கு அவர்கள் கட்சியில் இருக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கே நேரம் போதவில்லை. பாஜவும், அமித்ஷாவும் என்ன சொல்கிறார்களோ அதன்படியே அவர்கள் இயங்கி வருகின்றனர். தமிழகத்தில் இந்தியா கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக திமுக-காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றியை பெறும்.
காமராஜரை இழிபடுத்தி பேச்சு; டிஜிபியிடம் புகார்
காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு கருத்துகளை யூடியூபர் முக்தார் என்பவர் பேசியிருந்தார். அவரது பேச்சை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராஜேஷ் குமார் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் ராம் மோகன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், முத்தழகன் உள்ளிட்ட காங்கிரசார் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.