அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலம் விரைவில் வரும்: செங்கோட்டையன் பேட்டி
கோபி: ‘‘அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலத்தை விரைவில் பார்க்கப் போகிறோம்’’ என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவுமான செங்கோட்டையன் வகித்து வந்த அதிமுக கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்தார். இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற அவர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி நீக்கியதோடு அவரது ஆதரவாளர்களையும் நீக்கினார்.
இந்நிலையில், கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’’ என்ற முறையில் 45 ஆண்டு காலம் எனது பணியை ஆற்றி வருகிறேன். இளவரசரை போல் நான் என்றும் இருந்ததில்லை. எளிமையான வாழ்க்கை நடத்துவதால் தான் 3 முறை வாக்காளர்களை தேர்தல் களத்தில் சந்திக்காமல் நான் இத்தொகுதியில் வெற்றி பெற்றேன். உழைப்பவரை எவராலும் வீழ்த்த இயலாது. அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நாங்களும் பயணிக்கிறோம்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2017-18ல் அமைச்சர் பொறுப்பேற்று அதற்கு பிறகு அமைச்சரவையில் பல்வேறு பணிகளை ஆற்றி இருக்கிறோம். அன்றைக்கெல்லாம் இது போன்ற இடர்பாடுகள் வரவில்லை. ஒரு தலைமைக்கு இடர்பாடுகள் சோதனைகள் வரும்போது, நெருக்கடிகள் வரும்போது அந்த இயக்கத்தை நெருக்கடியில் இருந்து காப்பாற்றி வளர்த்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா.தியாகத்திலும் சோதனையிலும் பிறந்த இயக்கம்தான் அதிமுக. அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலத்தை விரைவில் பார்க்கப் போகிறோம்.