ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு குறைகிறது: அமைச்சர் கவலை
கோவை: கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் கோவை மண்டல தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த மையத்தை தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரையில் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்தலாம். தொழில்நுட்ப பரிமாற்றம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். கடந்த 2016-ல் நான் எதிர்கட்சியில் இருந்த போது, கல்வி நிறுவனங்களின் உற்பத்திக்கும், பொருளாதாரத்தின் தேவைகளுக்கும் இடைவெளி இருப்பதாக கூறினேன்.
அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தொழில் வழிகாட்டுதல் மற்றும் சுகாதாரத்திற்கான முயற்சிகளை நான் துவங்கியதற்காக பாராட்டினார். பின்னர், பெரிய அளவில் தீவிரம் காட்டவில்லை. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெரிய அளவில் பல்வேறு திட்டங்கள் மூலம் ஸ்டார்ட் அப், ஏஐ, டிஎன்டி அமைத்து பல முயற்சிகளை எடுத்தோம். பன்னாட்டு நிறுவனங்கள் மனிதவளம் பயன்படுத்துவதை குறைத்துள்ளது. ஏஐ டெக்னாலஜியை அதிகம் பயன்படுத்துவதால், எப்போதும் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்புகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிகளவிலான ஸ்டார்ட்அப்கள், புதுமையான கண்டுப்பிடிப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் ஸ்டார்ட் அப்களுக்கு ஆய்வகங்கள், வடிவமைப்பு வசதிகள், துல்லிய சோதனை மையங்கள், சட்ட மற்றும் தொழில்முறை வழிகாட்டல் போன்றவைக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு துறைகளுக்கு தேவையான நவீன தீர்வுகளை ஸ்டார்ட் அப்கள் வழங்கும் வகையில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.