ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண் அலுவலர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி வட்டார வேளாண்மை அலுவலகத்தில், முருகேசன் என்பவர், உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் நாடுவனப்பள்ளி கிராமத்தில் உள்ள மங்கம்மா என்பவர் மானாவாரி தரிசி நில மேம்பாட்டு திட்டத்தில் மாடு வாங்கி, வேளாண்மை துறை மூலம் வழங்கும் மானியத்திற்கு விண்ணப்பித்தார். இதற்கான மானியம் ரூ.32ஆயிரத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.20ஆயிரம் கிடைத்தது. ஆனால் மீதமுள்ள 12ஆயிரத்தை விடுவிக்க முருகேசன் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
பணம் தர விருப்பமில்லாத மங்கம்மா, இதுதொடர்பாக தனது மருமகன் கவுரிசங்கருடன் சென்று, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கவுரிசங்கரிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை கவுரிசங்கர் எடுத்துச் சென்று முருகேசனிடம் கொடுத்தார். அதனை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார், முருகேசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.