வேளாண் பல்கலையில் டிப்ளமோ துணை கலந்தாய்வுக்கு ஆக.29 வரை விண்ணப்பிக்கலாம்
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் http://tnau.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலமாக துணை இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
இந்த துணை கலந்தாய்வுக்கு பொது விண்ணப்பித்தினை இடைநிறுத்திய மற்றும் சமர்ப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, விண்ணப்பிக்காத மாணவர்கள், பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், வேளாண் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வரும் 29ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும், இதுதொடர்பாக மாணவர்களின் சந்தேகங்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண் கல்லூரிகளையும், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களையும் அணுகலாம்.