விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாய தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்
*எம்.பி செல்வராஜ் மரியாதை செலுத்தினார்
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாய தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உடலுக்கு அரசு சார்பில் எம்.பி செல்வராஜ் மற்றும் ஆர்.டி.ஓ யோகேஷ்வரன் மரியாதை செலுத்தினர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கட்டிமேடு அருகே எல்லைநாகலடி பகுதியை சேர்ந்தவர் விவசாய தொழிலாளி ஜெகதீஷ் பாபு (36). இந்நிலையில் கடந்த 6ந் தேதி நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் ஜெகதீஷ் பாபு படுகாயமடைந்ததையடுத்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை ஜெகதீஷ் பாபு மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்த நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) சுமதி தலைமையிலான மருத்துவர்கள் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்து ஜெகதீஷ் பாபுவின் இதயம், சிறுநீரகம், கண், தோல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக எடுத்துக் கொண்டனர்.
இதனையடுத்து ஜெகதீஷ் பாபுவின் உடலுக்கு அரசு சார்பில் நாகை எம்.பி செல்வராஜ், மன்னார்குடி ஆர்.டி.ஓ யோகேஸ்வரன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுமதி, மருத்துவமனை நிலைய அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.