இருநாடுகளும் கூட்டு ஒப்பந்தம் பாகிஸ்தானை தாக்கினால் சவுதியை தாக்கியதற்கு சமம்: இந்தியா உறவுக்கு ஆபத்தா?
இஸ்லாமாபாத்: கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் புகுந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்லாமிய நாடுகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை சவுதியில் நடந்தது.
அப்போது இரு நாடுகளின் மீதான எந்தவொரு தாக்குதலும் இருவருக்கும் எதிரான ஆக்கிரமிப்பாக கருதப்படும் என்று முக்கிய கூட்டு ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். இதை பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் என்று அறிவித்து உள்ளனர். அதில்,’எந்தவொரு நாட்டிற்கும் எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இருவருக்கு எதிரான ஆக்கிரமிப்பாகக் கருதப்படும்’என்று கூறப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு முதல் சவுதியும், பாகிஸ்தானும் நெருக்கமாக உள்ளன. பண நெருக்கடியால் தவித்த பாகிஸ்தானுக்கு அதிக அளவு நிதியை சவுதி வழங்கி உள்ளது. அதே போல் இந்தியாவுடனும் சவுதி நெருக்கமாக உள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியா, சவுதி உறவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து கவலை தெரிவித்த மூத்த அமெரிக்க தூதர் சல்மே கலீல்சாத்,’ இது பல கேள்விகளை எழுப்புகிறது.
இந்த ஒப்பந்தத்தில் ரகசிய இணைப்புகள் உள்ளதா, அப்படியானால், அவை என்ன சொல்கின்றன? இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க இடையிலான பாதுகாப்பில் நம்பிக்கை குறைந்து வருவதற்கான அறிகுறியா? பாகிஸ்தானிடம் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு முழுவதும் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய அணு ஆயுதங்கள் மற்றும் விநியோக அமைப்புகள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள இலக்குகளை அடையக்கூடிய அமைப்புகளையும் அது உருவாக்கி வருகிறது’ என்றார்.