20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு நாளை வரை கெடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்பதற்கு நாளை வரை கெடு விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச அமைதி திட்டத்தை அறிவித்துள்ளார். கடந்த திங்கள்கிழமை(செப்.29) வாஷிங்டன் சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வௌ்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அதன்பிறகு டிரம்ப்பின் 20 அம்ச அமைதி திட்டத்தை ஏற்பதாக தெரிவித்தார்.
ஆனால், டிரம்ப்பின் 20 அம்ச அமைதி திட்டத்தை ஏற்பது குறித்து ஹமாஸ் இன்னும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது நேற்று வான்வழி, தரைவழி தாக்குதல்களை நடத்தியது. இதில் 57 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சோஷியல் ட்ரூத் சமூக வலைதளத்தில் வௌியிட்டுள்ள செய்தியில், “இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த 20 அம்ச அமைதி திட்டத்தில் ஒவ்வொரு நாடும் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டத்தை ஹமாஸ் பிரிவினர் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள்(அமெரிக்க நேரப்படி) ஏற்க வேண்டும். இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் இதுவரை கண்டிராத நரக தாக்குதல்களை ஹமாஸ் சந்திக்க நேரிடும்” என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.