ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 250 பேர் உயிரிழப்பு; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!
காபூல் : ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதில் இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிற்கு அருகே இருக்கும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் நள்ளிரவு 12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால், வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன.
கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 250 பேர் பலியான நிலையில், 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பலரும் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். மேலும் பலரை காணவில்லை என்பதால் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அதனால், இன்னும் உயிரிழப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில், மீண்டும் 4.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த 2 நிலநடுக்கத்தால், நகங்கர் மாகாணத்தில் மக்கள் அச்சம் அடைந்தனர்.