ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது: பிரதமர் மோடி
டெல்லி :ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்தவர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது."இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடரில் உள்ள அசதாபாத் பகுதியை மையமாகக் கொண்டு, சுமார் 29 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 700 பேர் பலியான நிலையில் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் மற்றும் இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் தஜிகிஸ்தானின் சில பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன.