அடையாறு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி 2 நாட்களில் நிறைவு செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு இரண்டு நாட்களுக்குள் விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவ மழையையொட்டி, கடந்த 19.10.2025 அன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கடந்த 21ம் தேதி தலைமைச் செயலகத்திலிருந்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு, விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை விரைந்து மேற்கொண்டு, மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாத்திடவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
24.10.2025 அன்று சென்னை, சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்து முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை மீண்டும் ஆய்வுசெய்தபோது, பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொண்டு 2 நாட்களுக்குள் நிறைவு செய்திட வேண்டும்.
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை சுமார் 150 மீட்டர் அகலப்படுத்த ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், நேற்று மீண்டும் ஆய்வுமேற்கொண்டபோது, 200 மீ. அகலத்திற்கு போர்க்கால அடிப்படையில் விரைந்து தூர்வாரி அகலப்படுத்தப்பட வேண்டும். மேலும் படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, தற்போது 14 பொக்லைன் இயந்திரங்களும், 4 ஜேசிபி இயந்திரங்களுடன் அடையாறு ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மண் திட்டுகளை அகற்றி அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை இரண்டு நாட்களுக்குள் விரைந்து முடித்திடவும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை விரைவுப்படுத்திட, கூடுதலாக களப் பொறியாளர்களை ஈடுபடுத்தி தூர்வாரி அகலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கூவம், முட்டுக்காடு, எண்ணூரில் கொசஸ்தலையாறு ஆகிய பகுதிகளில் உள்ள முகத்துவாரப் பகுதிகளையும் தூர்வாரி, அகலப்படுத்த வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.